Thursday, August 2, 2007

2000 ஆண்டுகளுக்கு முன்னர் பணக்கார நாடான இந்தியா

சமீபத்தில் ஆசியா வளர்ச்சி வங்கி நடத்திய ஆய்வில் இந்தியாவும், சீனாவும் வாழ்க்கை தரத்தில் பின் தங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆசியா வளர்ச்சி வங்கி 22 ஆசிய நாடுகளில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வாழ்க்கை தரத்தில் இந்தியாவுக்கு 17-வது இடமும், சீனாவுக்கு 15-வது இடமும் கிடைத்துள்ளது. முதல் 5 இடத்தை ஹாங்ஹாங், தைவான், சிங்கப்பூர், புருணை மற்றும் மக்கா ஆகிய நாடுகள் முறையே பிடித்துள்ளன.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவும், சீனாவும் மிகப்பெரிய பணக்கார நாடுகளாக இருந்ததாக அங்குஸ் மடிசன் The World Economy: A Millennial Perspective என்ற நுலில் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கிடையே 59% வர்த்தகம் நிலவியதாக அவர் கூறுகிறார். இதில் இந்தியாவின் பங்கு 33%, சீனாவின் பங்கு 26% எனவும் அந்நுலில் கூறப்பட்டுள்ளது.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் வாழ்க்கை தரம் மற்ற நாடுகளை விட உயர்வாக இருந்ததாகவும் இந்தியா வளமான பணக்கார நாடு எனவும் கிரேக்க பயணி மெகாஸ்தீன்ஸ் மற்றும் சீனா பயணி யுவான் சுவாங் ஆகியோர்கள் குறிப்பிடுகின்றனர்.

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் மக்கள் தொகை 7.5 கோடிக்கு குறைவு, சீனாவின் மக்கள் தொகை 6 கோடிக்கும் குறைவு, ஜப்பானின் மக்கள் தொகை சுமார் 30 லட்சம், உலக மக்கள் தொகை சுமார் 22 கோடி எனவும், உலக மக்கள் தொகையில் நான்கில் 3 பங்கினர் ஆசியாவில் வசித்தனர் எனவும் அவர் கணிக்கிறார்.

5000 ஆண்டுகளான சிந்துவெளி சமவெளி நாகரிகம், இந்தியாவின் பழமை, நாகரிகத்திற்கு சிறந்த ஆதாரம். சிந்து சமவெளியில் கோதுமை, பார்லி போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. உலகில் முதன் முதலாக பருத்தி இங்குதான் பயிரிடப்பட்டுள்ளது. மாடு., பூனை, பன்றி, நாய் போன்ற வீட்டு விலங்குகள் வளர்க்கப்பட்டுள்ளன. யானைகள் மரங்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளன. வரி வசூல் செய்யும் முறையும் நடப்பில் இருந்துள்ளது. அண்டை நாடுகள் அரபு வளைகுடா, மேற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா நாடுகளுடன் வர்த்தமும் நடைபெற்றிருக்கிறது.

ஆனால் சிந்துவெளி சமவெளி எப்படி அழிந்தது என்பதற்கு என இதுவரை உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. பருவ நிலை மாற்றம், வறட்சி, வெள்ளம், ஆரிய படையெடுப்பு ஆகியவற்றால் அழிந்திருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். 1998-ல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த போது 'ஆரியர்கள் கைபர் கனவாய் வழியாக ஆடு மாடு மேய்ப்பவர்களாக இந்தியாவிற்கு நுழைந்தனர்' என்று இருந்த பள்ளி பாடத்தை மாற்றி, 'ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடி மக்கள்' என மாற்ற முனைந்தனர்.